அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் காஷ்மீர் பகுதியில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் பலியாயினர். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தின. பாலகோட் பகுதியில் இருந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அப்போது விமானப்படை வீரர் அபிநந்தன் பயணித்த மிக் 21 ரக விமானம், பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் காயங்களுடன் விழுந்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். 60 மணி நேரத்துக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக், பாகிஸ்தான் செய்தி நிறுவனத்திற்க்கு அளித்த பேட்டியில், ‘’பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய வீரர் அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், இந்தியா நிச்சயம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். அதுவும் இன்று இரவு 9 மணிக்கே இந்தியா போர் தொடுக்கலாம். எனவே அபிநந்தனை விடுவிப்பதுதான் சிறந்தது என்று வெளியுறவு அமைச்சர் குரேஷி, நடுக்கத்துடன் கூறியதாகவும், இதைக்கேட்ட, ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியதாகவும்’ தெரிவித்தார்.

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு அந்த நாட்டிலும், இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அயாஸ் சாதிக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவு த்ரி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ’’அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. பாகிஸ்தான் அரசு இந்த முடிவை அமைதியின் வழியாகவே எடுத்தது. இது சர்வதேச சமூகத்தால் பாராட்டப்பட்டது’’என்று தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக், ’பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியதாக கூறியதில் உண்மையில்லை’ என பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவு த்ரி தெரிவித்துள்ளார்.