உலகின் வலிமையான பாஸ்போர்ட் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, உலகம் முழுவதும் 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை அதாவது விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பதால், உலகின் அனைத்து பாஸ்போர்ட்டுகளை விடவும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. மொத்தம் 277 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை சிங்கப்பூர் பாஸ்போர்ட் அனுமதிக்கிறது.
இந்த பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜப்பான், இந்த முறை 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பாஸ்போர்ட், உலகம் முழுவதும் 182 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது. ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த நாடுகளின் பாஸ்போர்ட் 190 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசை பட்டியலின்படி, கடந்த ஆண்டை விட 5 இடங்கள் முன்னேறி 80ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 57 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது. டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன.
ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 6ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, நடப்பாண்டில் இரண்டு இடங்கள் சரிந்து 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. பிரெக்சிட் வாக்கெடுப்புக்கு பிறகு, இறக்கம் கண்ட இங்கிலாந்து பாஸ்போர்ட், இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இங்கிலாந்து இதே 4ஆவது இடத்தில் இருந்தது.
ஆப்கனில் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கை!
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் (103) கடைசி இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் பாஸ்போர்ட் 27 இடங்களுக்கான அணுகலை வழங்குகிறது. மேலும், தரவரிசைப் பட்டியலில் ஏமன் 99, பாகிஸ்தான் 100, சிரியா 101, ஈராக் 102 ஆகியவை கடைசி ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேக மற்றும் அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியலானாது தயாரிக்கப்படுகிறது. அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் முன்விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹென்லி & பார்ட்னர்ஸின் தலைவரான டாக்டர் கிறிஸ்டியன் ஹெச் கெயிலினால் இந்த நடைமுறை கண்டுபிடிக்கப்பட்டது.