உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட நாடு அமெரிக்கா என்பதும் பெருமைமாயக உள்ளது என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்காவில், மற்ற நாடுகளை விட பாதிப்பு அதிகம்.  அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 93 ஆயிரத்தை தாண்டி விட்டது. கொரோனா பரிசோதனை அளவிலும் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெருமிதப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ’’உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோய் தொற்று நோயாளிகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவும் ஒரு கவுரவம்தான்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், ஒரு சிறப்பு விஷயமாக இதை நான் பார்க்கிறேன். ஏனென்றால் நமது கொரோனா வைரஸ் பரிசோதனை மிக சிறப்பாக இருக்கிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களை விட நாம் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா பரிசோதனையை செய்து வருகிறோம். எனவே அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளை கொண்டிருப்பதை மோசமான காரியமாக நான் பார்க்கவில்லை. உண்மையிலேயே இது ஒரு கவுரவம்தான்.

இது நமது பரிசோதனை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்த அனைத்து வேலைகளுக்கும் கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரம்’’ என அவர் தெரிவித்தார்.