இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸில் ஒரு  திடீர்  பிறழ்வு ஏற்பட்டுள்ளதாகவும்,  இதனால் அது விரைவில் பலவீனமடையக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் மரபணு ஆராய்ச்சி மூலம் இது தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்,   தற்போது இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள திடீர் பிறழ்வு  கடந்த 2003 ஆம் ஆண்டில் சார்சில் ஏற்பட்ட மரபணு மாற்றத்தை ஒத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது ,  ஆனாலும்  இந்த வைரஸின் கோரத்தாண்டவம் இன்னும் ஓயவில்லை .  ஒட்டுமொத்த உலகமும் வைரஸ் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதுடன் , இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறி  வருகிறது .  இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்  இந்த வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில்  விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மற்றொரு புறம் இந்த வைரஸ் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது அதன் பிறப்பிடம் எது ,  அதில் ஏற்படும் பரிணாமங்கள் என்ன.?  என்பவைகளைப் பற்றியெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர் . இந்நிலையில் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் பயோ டிசைன் இன்ஸ்டிடியூட்டில் உதவி பேராசிரியரான முன்னணி ஆய்வு எழுத்தாளர் டாக்டர் எஃப்ரென் லிம் மற்றும் அவரது குழுவினர் அடுத்த தலைமுறை வரிசைமுறை எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டை  ஆராய்ந்து வருகின்றனர், அதாவது இந்த தொழில்நுட்பத்தில் வைரஸ் காலப்போக்கில் எவ்வாறு பரவுகிறது,  அது எப்படி மாறுகிறது அல்லது மாற்றி அமைக்கிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரசை மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் .  இந்நிலையில்  அரிசோனாவில்  உள்ள சுமார் 382 கொரோனா வைரஸ் நோயாளிகளின் சளி மாதிரிகளை அவர்கள் ஆராய்ந்தனர் ,  அதில் ஒரு மாதிரியில் மட்டும்  வைரஸின் மரபணுவில் குறிப்பிடத்தக்க பகுதியை காணவில்லை, 

இந்த திடீர் மாற்றம் 2003 ஆம் ஆண்டு சார்ஜ்  வைரஸில் ஏற்பட்ட மாற்றத்தை ஒத்திருக்கிறது,   எனவே இது மேலும் ஆராய தூண்டுவதாக ஆராய்ச்சியாளர் லிம்,  தெரிவித்துள்ளார் .  ஒரு வைரஸில் மரபணு   பிறழ்வு அல்லது நீக்கம் இயல்பானதுதான் ஆனால் அது எங்கு நிகழ்கிறது என்பது தான் முக்கியம்  அந்த வகையில்  வைரஸின் ஒரு முக்கிய பிறழ்வு தற்போது ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.   மொத்தத்தில் இதை வைத்து கொரோனா  அதன் ஆற்றலை இழக்க தொடங்குகிறதா என்பதை மிக விரைவில் கூற முடியுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்த அனைத்து நோயாளிகளுக்கும் சில மருத்துவ ரீதியான வைரஸ் அறிகுறிகள் இருந்தன,  அதாவது 81 வகையான மரபணு இழப்புகளை  கொண்ட வைரஸ்கள் கூட நோயாளிகளை வலிமையாக நோய்வாய்ப்பட வைக்கிறது எனக் கூறியுள்ளனர் .  இன்றுவரை வரிசைப்படுத்தப்பட்ட 16,000 கொரோனா  வைரஸ் மரபணுக்களில் இதுபோன்ற நீக்கம் அல்லது பிறழ்வு காணப்படுவது இதுவே முதல் முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் . 

இது உலக அளவில்  சுமார் 3.6 மில்லியன்  பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது அரை சதவீதத்திற்கும் குறைவானது என்றும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு துளி போல வைரஸில் மாற்றம் தென்படுகிறது எனவும் விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர் .  ஆனால் இது மிகவும் நம்பிக்கைக்குரிய விஷயம் அதிக அளவில் கொரோனா வைரஸ் மரபணுக்கள் வரிசைப் படுத்தப்பட்டால் அதிகமான மரபணு மாற்றங்களை அறியமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.