ஆமாம், நியூயார்க் நகரில் வசிக்கும் ஆண்ட்ரூ என்பவர் பார்க்கிங்கில் தனது காஸ்டலியான மஸ்டாங் காரை நிறுத்தி வைத்துவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். அப்போது நிறுத்தப்பட்டிருந்த கார் சேதப்படுத்தப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அவரது காரை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக கோபத்துடன் இருந்தவரை, ரிலாக்ஸ் செய்திருக்கிறது, அந்த காரின் மேல் இருந்த ஒரு கடிதம். அது ஒரு சுட்டிக் குழந்தையின் கையழுத்தில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யத்துடன் படித்து, அதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

அந்தக் கடிதத்தை எழுதியது,  6 -ம் வகுப்பு படிக்கும் சுட்டிக் குழந்தை. அந்தக் குழந்தைதான் கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதில்,  "உங்கள் காருக்கு என்ன ஆகியது என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் காரை இடித்தது எங்கள் பள்ளி வாகனம்தான். பேருந்து எண்: 449. அந்தப் பேருந்து, தினமும் என்னை அழைத்துச்சென்று, பின் இங்கே இறக்கிவிடும். இந்தச் சம்பவம் மாலை 5 மணிக்கு நடந்தது. ஓட்டுநர் காரை எடுக்கும்போது மோதிவிட்டார். அதன்பின் நிறுத்தாமல் சென்றுவிட்டார். அவர் மோதியதில் உங்கள் வாகனம் சேதமடைந்தது. இதனை நான் நேரடியாகப் பார்த்தேன். ஸாரி! பேருந்தை இயக்கியவர் ஒரு பெண் ஓட்டுநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

கடைசியாக, அந்தப் பேருந்து எப்படி இருக்கும் என்பதையும் தனது கையால் வரைந்து வைத்துள்ளார். அதற்கும் கீழே, ஹௌடன் அகாடமியின்  6 -ம் வகுப்பு ஸ்டூடென்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது பற்றி பேசிய அன்ட்ரூ ``இது தொடர்பாக குறிப்பிட்ட பேருந்து நிறுவனத்திடம் பேசிவிட்டேன். காரை சரி செய்வதற்கு உதவுகிறோம் என அவர்கள் உறுதி அளித்தனர். மேலும் குறிப்பிட்ட அந்த ஓட்டுநரும் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். குறிப்பிட்ட அந்தக் பள்ளியின்  ஆசிரியர் ஒருவர், கையழுத்தை வைத்து அந்தக் குழந்தை யார் என்பதைச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார். ஒரு 6 -ம் வகுப்பு குழந்தை எனது செலவையும், கோபத்தையும் குறைத்துவிட்டது. அதுவும் அவர் வரைந்துள்ள பேருந்து, ஓவியத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளைப் பார்த்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது” என்றார்.

மேலும், அந்தப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் சி.என்.என்,  அந்தக் குழந்தை யார் என்று கண்டுபிடித்து விட்டோம். அவரது உதவும் எண்ணத்தைக் கொண்டாட உள்ளோம்.  அவருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளோம்” என்றார். ஒரு 6 -ம் வகுப்பு படிக்கும் குழந்தையின் உதவும் குணத்தை பார்த்து  பாராட்டிவருகின்றனர். ஆண்ட்ரூ ட்வீட்டை இதுவரை 265,000 ரீட்டிவீட் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 1,222,000  லைக்ஸ் குவிந்துள்ளது. மேலும் இந்த ட்வீட் ஒட்டுமொத்த டிவீட்டர் வாசிகளின் கவனத்தை இழுத்துள்ளது.