2021 ஆம் ஆண்டில் முதல் பாதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு  வரக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.5 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இதுவரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்துள்ளனர்.வைரஸை தடுக்க சர்வதேச அளவில் எத்தனையோ நடவடிக்கைகளை உலக நடுகள் மேற்கொண்டும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் நாடுகள் திணறி வருகின்றன.  

தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சியில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி சோதனைகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது:- கொரோனா தடுப்பூசி 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.  சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இதுவரை இரண்டாம் கட்ட  சோதனையை நிறைவு செய்துள்ளன. இப்போது அவர்கள் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அடுத்த மூன்றாம் கட்ட சோதனை மருத்துவ சோதனை என்று அழைக்கப்படுகிறது. இது மிக முக்கியமான படிநிலை ஆகும்,  

இந்த  சோதனையின் முடிவை அடிப்படையாக வைத்து வைத்தே மருந்து வெற்றியா, தோல்வியா என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால் அது வெற்றிகரமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.  அதே நேரத்தில் கோவிட் வைரஸில் மரபணு மாற்றத்திற்கான சாத்தியத்தையும் தடுப்பூசியில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு வைரசிலும் பிறழ்வு, செயல்முறை தொடர்கிறது. விரைவான ஆன்டிஜன் சோதனை பிரச்சினையில், பல இடங்களில் தவறான முடிவுகள் வெளிச்சத்துக்கு வந்தாலும், பல நாடுகள் இதை முயற்சித்தன என்று அவர் கூறினார். இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்வதால் இது ஒருவித கவலையை ஏற்படுத்துகிறது, விரைவில் தடுப்பூசி கிடைக்க வேண்டும், அதேபோல் தற்போதைய நிலையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவர மும்பையில், அரசு மேலும் மேலும் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், டெல்லி ஆர்டி பி.சி.ஆர் சோதனை நல்ல பலனை அளிக்கிறது என்றும் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.