The chance to exchange old 500 1000 notes- The central government sent a notice to the Reserve Bank of India

நியாயமான காரணங்களால் செல்லாத ரூ. 500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற முடியாமல் போன மக்களுக்கு, அதை மாற்ற ஏன் மற்றொரு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மற்றொரு வாய்ப்பு வழங்குவது குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் ஆணையிட்டனர்.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகள், ஊழலை ஒழிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர்8-ந் தேதி ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டது.

காலக்கெடு

அதன்பின், இந்த டிசம்பர் 30-ந் தேதி காலக்கெடுவுக்குள் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாத மக்கள், அதாவது வௌிநாடுகளில் தங்கி இருப்போர், சுற்றுலா சென்றவர்கள், என்.ஆர்.ஐ., ராணுவத்தில் பணியாற்றுவோர் உள்ளிட்டோர் 2017, மார்ச் 31ந் தேதி வரைரிசர்வ் வங்கியில் செல்லாத நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

திடீரென மறுப்பு

ஆனால், திடீரென அந்த உத்தரவிலும் மாற்றம் செய்த மத்திய அரசு மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதி மறுத்தது.

வழக்குகள்

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.

இதில் மனுதாரர் வௌிநாடு வாழ் இந்தியரான சுதா மிஸ்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ ரூபாய் நோட்டு தடை காலத்தில், ன் மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கியில்டெபாசிட் செய்யலாம் என்ற உறுதியையும் மத்திய அரசு மீறி, டெபாசிட் செய்ய அனுமதிக்க மறுத்துவிட்டது. ஆதலால் நியாயமாக ஈட்டிய பணத்தை டெபாசிட் செய்ய அனுமதிக்க கோரி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும்உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

விசாரணை

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் ஓய். சந்திரசூத்ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகினார்.

ஏன் அரசு தடுக்கிறது?

அப்போது நீதிபதிகள், “ நியாயமான காரணங்களால் ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வழங்கிய குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டெபாசிட் செய்ய முடியாமல் இருந்து இருப்பார். ஒருவேளை அவர் சிறையில் கூட இருந்து இருக்கலாம். அப்படி இருக்கையில் அவர் நியாயமாக ஈட்டிய பணத்தை டெபாசிட் செய்வதை ஏன்மத்திய அரசு தடுக்கிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

என் பணத்தை பறிக்க முடியாது

நீங்கள் யாருடைய சொத்துக்களையும் எடுத்துக் கொள்ள முடியாது. இது என்னுடைய பணமாக இருந்தால், அது குறித்து நான்தான் முடிவு எடுக்க முடியும். அதை என்னிடம் இருந்து நீங்கள் பறித்துக்கொள்ள முடியாது.

மக்கள் பாதிப்பு

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்து அவரால் அந்தப் பணத்தைடெபாசிட் செய்ய முடியாமல் போயிருந்தால் அவருக்கு நிச்சயமாக இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உண்மைகளை ஆதாரத்தோடு விளக்கும் பட்சத்தில் அவருக்கு அரசு இன்னொரு வாய்ப்பு வழங்காமல் இருக்க முடியாது. அவரது பணத்தை அவர் எதற்காக இழக்க வேண்டும்.

அரசின் கெடுபிடிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீர்வு அளிக்காவிட்டால் பிரச்சினைகள் பெரிதாகும்’’ என்றனர்.

தனிநபருக்கு சலுகை கிடையாது

இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல்ரஞ்சித் குமார், " தடை செய்யப்பட்ட நோட்டுகளை டெபாசிட்செய்வதற்காக காலக்கெடு விதிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு ஏற்கெனவே பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.குறுக்கு வழிகளில் ஏராளமானோர் பணத்தை மாற்ற முயற்சித்தனர், 800க்கும் மேற்பட்ட ரெய்டுகள்நடத்தப்பட்டன. 5,100 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு தனிநபருக்காகவும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது" என்றார்.

2 வாரங்கள்

 இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ நியாயமான காரணங்களால் செல்லாத ரூ. 500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற முடியாமல் போன மக்களுக்கு, அதை மாற்ற ஏன் மற்றொரு வாய்ப்பு வழங்கக்கூடாது?. இது குறித்து 2 வாரங்களுக்குள் மத்திய அரசு , ரிசர்வ் வங்கி பதில் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.