நாள்ஒன்றுக்கு கூடுதலாக ரூ.110 ஊதியம் தர நிர்வாகங்கள் ஒப்புதல்

கொழும்பு, அக். 19:-

இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த 19 மாதங்களாக ஊதிய உயர்வு கோரி போராடிய போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.110 தர தோட்ட நிர்வாகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

இதையடுத்து, தொழிலாளர் சங்கங்களுக்கும், தோட்ட நிர்வாகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனது.

புதிதாக கையொப்பமாகிய இந்த ஒப்பந்தத்தின்படி தற்போது தேயிலை மற்றும் ரப்பர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 620 ரூபாய் தினசரி சம்பளம் 730 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் 300 நாட்கள் வேலையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்து கிலோவிற்கு தற்போது 25 ரூபாயும் ரப்பருக்கு 30 ரூபாயும் வழங்கப்படுகிறது, இதிலும் ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் ரூ. ஆயிரம் ஊதியம் கேட்டும், நிலுவை தொகையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ள நிலையில், நிலுவை தொகை குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தோட்ட நிர்வாகங்களின் அமைப்பு- தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் , தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.

தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் குறித்த இரு தரப்பு ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் பட வேண்டும். ஆனால், கடைசியாக 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப்பின் ஒப்பந்தம் ஏதும் புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை , வேலை நாட்கள் குறைப்பு தொடர்பாக தோட்ட நிர்வாகங்களின் நிலைப்பாடு 19 மாதங்களாக புதிய ஒப்பந்தம் கையொப்பம் இடுவதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று முடிவுக்கு வந்துள்ளது.