பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்க்கும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்திய அணியின் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா தவிர மற்ற அணிகளின் ஆட்டம் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்க்கும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ISKPஎன்ற பயங்கரவாத அமைப்பு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டினரை கடத்தி, பணயம் வைக்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உளவுத்துறைஇந்த வெளியிட்ட அறிக்கையில், ISKPபயங்கரவாத அமைப்பு சீன மற்றும் அரபு நாட்டினரை குறிவைத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் இந்த நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கைகளின்படி, ISKP அமைப்பினர் நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர், கேமரா கண்காணிப்பு இல்லாத மற்றும் ரிக்ஷா அல்லது மோட்டார் சைக்கிள் மூலம் மட்டுமே அணுகக்கூடிய இடங்களை தேர்வு செய்கிறார்கள். பாதுகாப்புப் படையினர் கண்களில் படாதவண்ணம் வெளிநாட்டவர்களை இரவில் கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பாகிஸ்தானில் வெளிநாட்டினர் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. ஷாங்லாவில் 2024 இல் சீன பொறியாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் 2009 இல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதன் பாதுகாப்புத் தயார்நிலை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளன. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் மைதானங்களை சுற்றியும், விரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை காட்டி இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தது. மேலும் பாகிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இப்போது சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்கத்திலேயே பயங்கரவதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
