அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் பணிக்காக, தமிழர்கள் இருவரை ரூ. 50 லட்சம் சம்பளத்தில் அந்த மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தின் நீலகரி மலைப்பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியினப்பிரிவைச் சேர்ந்த, மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவர்தான் பாம்பு பிடிக்கும் பணியில் இப்போது புளோரிடா மாநிலத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புளோரிடா மாநிலத்தில் அதிகரித்து வரும் மலை பாம்புகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக, அந்த மாநில அரசு தேர்ந்த பாம்புபிடிப்பவர்களை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தது. பாம்பு பிடிப்பதில் " கில்லாடி"களான இருளர் பழங்குடியின பிரிவு குறித்து அறிந்து, அவர்களில் இருவரை இந்த பணிக்காக "புளோரிடா பிஷ் அன்ட் வைல்ட் லைப் கன்சர்வேசன் கமிஷன்" நியமித்துள்ளது.

மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோருக்கு உதவுதற்காக இரு மொழிபெயர்பாளர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சடையன், கோபால் ஆகியோருக்கு உதவியாக ஒரு நாய் உள்ளது. இந்த நாயின் உதவியுடன், மலைப்பாம்புகளை லாவகமாகப் பிடித்து, வனத்துறையினரிடம் இவர்கள் ஒப்படைத்து வருகின்றனர்.
"புளோரிடா பிஷ் அன்ட் வைல்ட் லைப் கன்சர்வேசன் கமிஷன்" மற்றும், "லீ லார்கோ சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ்" அமைப்பின் தலைவர் எலிசபெத் மாசென்ஸ்கி கூறுகையில், "புளோரிடா மாநிலத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பர்மாவை அடிப்படையாகக் கொண்ட மலைப்பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. இந்த பாம்புகளால், புளோரிடா மாநிலத்துக்கே உரித்தான உயிரினங்கள் அழியத் தொடங்கிவிட்டன. இந்த மலைப்பாம்புகள் உண்மையில், எங்கள் நாட்டைச் சேர்ந்தவை அல்ல. இந்த பாம்புகள் முழுவதையும் பிடித்து அழிக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளோம்.

இதற்காக இந்தியாவில் இருந்து குறிப்பாக தென்மாநிலத்தில் இருந்து இருவரை அழைத்து வந்துள்ளோம். இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி, கோபால் இருவரும் மிகறும் லாவகமாக பாம்புகளை பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 50 லட்சமும், உதவியாக ஒரு நாய் உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்படுகின்றன.
புளோரிடா மாநிலத்தில் எங்கு மலைப்பாம்புகளைப் பார்த்தாலும் மக்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டுள்ளோம். அவ்வாறு மிகப்பெரிய பாம்புகளை பிடிக்க துணை செய்யும் மக்களுக்கு பரிசுகளும் அறித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
