சூடானில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலைக்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென அனைத்து இடங்களிலும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 18 பேர் இந்தியர்கள் ஆவார். மேலும் 130 பேர் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.