ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அதன் உறுப்பினர்கள் 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். இந்த தீர்மானம் தொடர்பாக  அடுத்த வாரம் அங்கு விவாதம் நடைபெற உள்ளது. 

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் உலக அமைப்புகளில் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் இம்ரான் கானின் குற்றச்சாட்டை எந்தவொரு நாடுகளும் கண்டு கொள்ளாமல் இருந்தன. இந்நிலையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. 


ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் காஷ்மீர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த வாரம் புதன்கிழமையன்று ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்றத்தில் விவாதம் நடக்க உள்ளது. அதற்கு அடுத்த நாள் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.