இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கல்முனை சாய்ந்த மருது பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு தீவிரமாக சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த வீட்டை அதிரடிப் படை வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் உள்ளே இருந்துகொண்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையின்போது வீட்டினுள் திடீரென குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. குண்டுவெடித்ததில் வீட்டிற்குள் இருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த மோதல் காரணமாக கல்முனை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இதனிடையே இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். 

மேலும் இலங்கையில் வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடி பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 சக்கர வண்டியில் சி 4 என்ற வெடிபொருளுடன் 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.