நெருக்கடி சமயத்தில் உதவி... ட்விட்டரில் நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே..!
இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில், அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்க ஒப்புக் கொண்டன.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவுக்கு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருவதை அடுத்து அவர் நன்றி தெரிவித்ததோடு இரு நாடுகள் இடையே உறவு மேலும் பலப்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
“இந்த கடினமான காலக்கட்டத்தில் இந்தியா நமக்கு உதவி செய்வதற்கு நான் இலங்கை சார்பில் நன்றி தெரிவித்தேன். நம் நாடுகள் இடையே உறவை பலப்படுத்த என விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ட்விட்டரில் தெரிவித்தார். இதே போன்ற மற்றொரு ட்விட்டர் பதிவில் ரணில் விக்ரமசிங்கே இலங்கைக்கு உதவ வெளிநாட்டு உதவி கூட்டமைப்பை உருவாக்க இந்தியா மற்றும் ஜப்பான் சார்பில் குவாட் நாடுகளிடையே முன்மொழிந்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
உதவி கூட்டமைப்பு:
“இந்தியா மற்றும் ஜப்பான் செய்யும் உதவி: இலங்கைக்கு உதவி செய்ய வெளிநாட்டு உதவி கூட்டமைப்பு ஒன்றை அமைக்க குவாட் உறுப்பு நாடுகள் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) முன்மொழிந்ததற்கு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில், அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்க ஒப்புக் கொண்டன. சமீபத்தில் தான் இந்தியா சார்பில் இலங்கைக்கு 260 மில்லியன் மதிப்பிலான சுமார் 25 டன் மருந்து மற்றும் இதர மருத்துவ பொருட்கள் அனுப்பப்பட்டது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் திட்டம்:
நெருக்கடி சூழலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் நிதி உதவி, போரெக்ஸ் சப்போர்ட், பொருட்கள் வினியோம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இந்த மனிதநேய பொருட்கள் வழங்கப்படுகிறது என இந்தியாவுக்கான உயர் ஆணையகம் தெரிவித்தது. “பிரதமர் நரேந்திர மோடியின் `Neighbourhood First` திட்டத்தின் கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று உயர் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.