ஜூன் 30ஆம் தேதி வங்கிகளுக்கு சிறப்பு விடுமுறை!
கடன் மறுசீரமைப்பை அமைப்பதற்காக ஜூன் 30ஆம் தேதி வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி சிறப்பு விடுமுறை அளித்துள்ளது
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பண நெருக்கடியான பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு (DDR) செயல்முறை குறித்த அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டது. இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பை அமைப்பதற்காக ஜூன் 30ஆம் தேதி வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி சிறப்பு விடுமுறை அளித்துள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படலாம் எனவும், வார இறுதியில் இலங்கை பாராளுமன்றம் அதை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை தொடர்ந்து வங்கி விடுமுறையாக இருக்கும் என்றும், ஜூன் 30 ஆம் தேதி கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
“உள்நாட்டுக் கடன்களை மேம்படுத்தும் நிலையை நாங்கள் தற்போது அடைந்துள்ளோம். இதற்காக, அமைச்சரவையில் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும், நாடாளுமன்றத்தில் நிதிக் கண்காணிப்புக் குழுவில் விவாதிக்கவும், இறுதியாக அதை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக முன்வைக்கவும் எங்களுக்கு சிறிது நேரம் தேவை. முழு செயல்முறைக்கும் குறைந்தது ஐந்து நாட்கள் தேவைப்படும்.” என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளை மறுநாள் முஹரம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமை, புத்தரின் முதல் பிரசங்கமான எசல பௌர்ணமி போயா மற்றும் பல்லக்கு வருகையை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒப்புதலுக்காக அடுத்த வார இறுதி வரை கொழும்பில் இருக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் செயல்முறையை விளக்கிய நிதியமைச்சர், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மொத்த உள்ளூர் கடன் தொகை இலங்கை ரூபாய் மதிப்பின்படி, 42 பில்லியனாக உள்ளது. இதில் பிரதானமாக 25 பில்லியன் கருவூல பத்திரங்கள், 11 பில்லியன் கருவூல பில்கள், 5 பில்லியன் அபிவிருத்தி பத்திரங்கள் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் மறு திட்டமிடல், திருப்பிச் செலுத்தும் நேரத்தை நீட்டித்தல் மற்றும் வட்டி குறைப்பு ஆகியவற்றை மட்டுமே விரும்புகிறோம். வங்கி டெபாசிட் செய்பவர்கள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்” எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்த திட்டம் தொடர்பாக அரசாங்க பாராளுமன்ற குழுவை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ஆகியோர் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.