வடகொரியாவை ஆத்திரமூட்டும் தென்கொரியா..!! ஒரு வாரத்திற்குள் 5 லட்சம் பலூன்களை பறக்கவிட்டு வம்பு..!!
ஜூன் 7 முதல் தென் கொரியா சுமார் 5 லட்சம் பலூன்களை வடகொரியாவிற்குள் பறக்கவிட்டுள்ளது. அதில் அதிபர் கிம் ஜாங் உன்னின் அணுசக்தி திட்டத்தை விமர்சிக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தென்கொரியா, வடகொரிய எல்லைக்குள் துண்டுப்பிரசுரங்கள் தாங்கிய லட்சக்கணக்கான பலூன்களை பறக்கவிட்டு வருவது வடகொரியாவை மிகுந்த கோபமடைய வைத்துள்ளது. உடனே இந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கிம் ஜாங் உன்னில் அதிகாரமிக்க சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அதாவது தென்கொரிய தலைநகர் சியோல் உடனான அனைத்து தொடர்புகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா அறிவித்தது, வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் ஒரு சர்வாதிகாரி என சித்தரித்து, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வடகொரிய எல்லையைத் தாண்டி துண்டுப்பிரசுரங்களை வீசினர்.
இந்த சம்பவத்தால் மிகுந்த கோபமடைந்த வடகொரியா, எல்லையில் அத்துமீறிய தங்கள் நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை தென்கொரியா ஒடுக்க வேண்டும், இல்லையென்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என எச்சரித்தது. அதேநேரத்தில், இருநாட்டு எல்லையில் கட்டப்பட்டுள்ள லைசான் அலுவலகமும் (தகவல் தொடர்பு அலுவலகம்) மூடப்படும் என வடகொரியா காட்டமாக கூறியது. இது குறித்து வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சக்திவாய்ந்த தங்கை கிம்-யோ-ஜாங் வெளியிட்ட அறிக்கையில், தென்கொரியாவின் சமூக சேவையாளர்களும், வடகொரியாவின் பிரிவினைவாதிகளும் நீண்ட காலமாக வடகொரியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம், எனவே அது போன்ற நபர்களை உடனே ஒடுக்க வேண்டும். "தென்கொரியா மீண்டும் மீண்டும் சாக்குப்போக்கு கூறி, வடகொரியாவுக்கு எதிரான நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால், அதற்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலத்திற்குள் அதாவது ஜூன் 7 முதல் தென் கொரியா சுமார் 5 லட்சம் பலூன்களை வடகொரியாவிற்குள் பறக்கவிட்டுள்ளது. அதில் அதிபர் கிம் ஜாங் உன்னின் அணுசக்தி திட்டத்தை விமர்சிக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர்கள் அதில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு வடகொரியா பலமுறை ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், துண்டு பிரசுரங்களை அனுப்பிவரும் போராட்டக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தென்கொரியா கூறிவரும் நிலையில் லட்சக்கணக்கான பலூன்கள் தொடர்ந்து வட கொரியாவுக்குள் பறக்கவிடப்பட்டுவருவது கிம் ஜாங் உன்னை ஆத்திரமூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.