ஜூம் மீட்டிங்கில் நிர்வாணமாக தோன்றிய மனைவி..! தர்மசங்கடத்திற்கு ஆளாகி மன்னிப்பு கேட்ட தென்னாப்பிரிக்க தலைவர்
தென்னாப்பிரிக்க தலைவர்கள் இடையேயான ஜூம் மீட்டிங்கில், அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரின் மனைவி தற்செயலாக நிர்வாணமாக ஸ்க்ரீனில் தோன்றிய சம்பவம், அனைவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
கொரோனா பெருந்தொற்று, வீட்டிலிருந்தே பணி செய்வதை பணியாளர்களுக்கு பழக்கப்படுத்தியுள்ளது. அதனால், அலுவல் சார்ந்த ஆலோசனை கூட்டங்கள் அனைத்துமே "Zoom" செயலி மூலம் நடக்கிறது.
"Zoom" மீட்டிங் வீட்டிலிருந்தே பணி செய்பவர்களின் வாழ்வியல் அங்கமாகிவிட்டது. ஜூம் மீட்டிங், அதில் கலந்துகொள்பவர்களுக்கு சில தர்மசங்கடங்களையும் ஏற்படுத்திவிடுகிறது. அப்படியான ஒரு தர்மசங்கட சம்பவம் தான் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா இறப்புகள் குறித்து தென்னாப்பிரிக்க தலைவர்களிடையே கடந்த மார்ச் 30ம் தேதி ஜூம் மீட்டிங் ஒன்று நடந்தது. அது நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
சோலிலே எண்டேவ் என்ற தலைவர் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். தென்னாப்பிரிக்காவில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட அந்த ஜூம் மீட்டிங்கில் இவரும் கலந்துகொண்டார். அப்போது எண்டேவ் ஜூம் மீட்டிங்கில் இருப்பது குறித்து அறியாமல், அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக தோன்றிய சம்பவம் அவருக்கும் அந்த மீட்டிங்கில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, எண்டேவிற்கு மேலும் மன உளைச்சலையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
எண்டேவின் மனைவி நிர்வாணமாக தோன்றியதையடுத்து, ஃபெய்த் முத்தம்பி என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர் குறுக்கிட்டு, உங்களுக்கு பின்னால் உள்ளவர் உடை அணியவில்லை என்று எச்சரிக்கை செய்ததுடன், நீங்கள் மீட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லவில்லையா? டிவிக்களில் நேரலையில் இருக்கிறீர்கள். இந்த சம்பவம் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று எண்டேவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, முகத்தை கைகளால் மூடிக்கொண்டு மன்னிப்பு கேட்ட எண்டேவ், இந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் மீட்டிங்கில் குறியாக இருந்ததால், என் மனைவி வந்ததை கவனிக்கவில்லை. என் வீட்டில் அலுவல் பணிக்கென்று தனி அறை இல்லை. என் மனைவி குளியலறையை பயன்படுத்த வந்தார். இதுமாதிரியான மீட்டிங்கெல்லாம் எங்களுக்கு புதிது. இந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இது தர்மசங்கடமாக உள்ளது என்றார்.