Asianet News TamilAsianet News Tamil

கடும் பஞ்சம், வறட்சி… சோமாலியாவில் 48 மணி நேரத்தில் 110 பேர் பலி

somaliya death
somaliya death
Author
First Published Mar 6, 2017, 7:20 AM IST


கடும் பஞ்சம், வறட்சி… சோமாலியாவில் 48 மணி நேரத்தில் 110 பேர் பலி

தெற்கு சோமாலியாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வயிற்றுப்போக்கு, பசி மற்றும் பஞ்சம் காரணமாக 110க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ள சோமாலியாவில், நாடு முழுவதும் பெரும்பாலானவர்களுக்கு உணவு கிடைப்பதே அரிதாகியிருக்கிறது. இந்நிலையில் பஞ்சம் மற்றும் வயிற்றுப் போக்கால் கடந்த இரு நாட்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஹசன் அலி கெய்ர், அரசால் இயன்ற உதவியை செய்து வருவதாகவும், சோமாலியர்கள் எங்கு இருந்தாலும் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் சக சோமாலியர்களைக் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே போன்று யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு பஞ்சம் காரணமாக நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் ஏமனில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் சோகம்போன்று மீண்டும் ஒருமுறை ஏற்பட வேண்டாம் என யுனிசெப் நிர்வாக இயக்குனர் அந்தோனி லேக் கூறியுள்ளார்.

சோமாலியாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைவாக உள்ளது, இந்நிலையில் பஞ்சம் காரணமாக இது இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

இதுவரை 6.2 மில்லியன் மக்கள் உணவுப்பற்றாக்குறைப் பிரச்சனையைச் சந்தித்துள்ளனர் என்றும், 1,85,000 குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கை 2,70,000 உயரக் கூடும் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios