டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் உலகத்தின் பிற நாடுகளில் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 203 நாடுகளுக்கு பரவி விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் 18 லட்சத்து 51 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 1,12,371 பேர் உயிரிழந்துள்ளனர்.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இதனிடையே சோமாலிய நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாகாண அமைச்சர் ஒருவர் பலியாகி இருக்கிறார். சோமாலியாவின் ஹீர்ஷபெலி மாகாணத்தின் நீதி மந்திரி ஹலீப் மம்மின் டூஹவ் (58). கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து சென்றுள்ளார். பின் நாடு திரும்பிய அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் நீதி மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனால் கொரோனா தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சோமாலியவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மாகாண மந்திரி ஒருவர் கொரோனாவால் பலியானது அங்கு பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இருவர் குணமடைந்துள்ளனர்.