Solar Eclipse : இன்று தோன்றும் ‘முழு சூரிய கிரகணம்.. ‘ எப்போது தோன்றுகிறது ? வெறும் கண்களில் பார்க்கலாமா..?
இந்திய நேரப்படி இன்று காலை 10.59 மணி முதல் பிற்பகல் 3.07 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் ‘சூரிய கிரகணம்’ என்கிறோம்.தமிழில் இதைச் ‘சூரியன் மறைப்பு’ என்று கூறலாம். சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது முழு சூரிய கிரகணம் நிகழும். பகலிலேயே சூரிய ஒளி மறைந்து வானில் இருள் தோன்றும். இந்த நிகழ்விற்கு முழு சூரிய கிரகணம் என்று பெயர்.
சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல் வானில் காட்சி தரும். சுமார் ஒரு நிமிடம் 54 நொடிகள் வரை இந்த கிரகணம் இருளை உருவாக்கும் எனவும், அப்படி இருள் ஏற்படும்போது வானில் நட்சத்திரங்களே தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. அண்டார்டிகா, தென்ஆப்பிரிக்கா, தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல், தென்னிந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்று இந்திய கோளரங்க இயக்குனர் ரகுநந்தன் குமார் தெரிவித்தார்.
எந்த சூரிய கிரகணத்தையும் நாம் வெறும் கண்களால் பார்க்க கூடாது. இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணம் பொருத்தவரையில், அதற்குரிய ஆங்கிகரிக்கப்பட்ட ஃபில்டர்கள் பொருத்திய கண்ணாடிகள் வழியாகவே பார்க்க வேண்டும். அதுவும், வெகு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க வேண்டும். ஏனென்றால், சூரிய கிரகணத்தில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், அதற்குரிய கண்ணாடி இருந்தாலும், நீண்ட நேரம் பார்க்க கூடாது.
இந்த கிரகணம் 'ரிவர்ஸ் போலார் சோலார்' (Reverse Polar Solar) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பூமியை நிலவு மிகவும் வேகமாக மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் சுற்றும். ஆனால், இந்த நிகழ்வின்போது, நிலவு கிழக்கு திசையிலிருந்து மேற்கில், சுழலும். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் இணையதளத்தில் நேரலையில் மட்டுமே காண முடியும். நேரடியாக காண வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது நாசா. இந்தியாவில் தெரிந்த கடைசி சூரிய கிரகணம் கடந்த ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஏற்பட்டது. இனிமேல், அடுத்த ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.