மெக்சிக்கோ நாட்டில், நடுவானில் விமானத்தில் பாம்பு இருப்பதைக் கண்ட பயணிகள் அலறியடித்து பீதியை கிளப்பியதையடுத்து, விமானம் திடீரென தரையிறக்கப்பட்டது.

‘ஸ்நேக்ஸ் ஆன் ல பிளேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதுபோல், விமானத்தில் உள்ள பயணிகள் பாம்பைப் பார்த்து அலறியடித்து சத்தம்போட்டனர். இவர்கள் அனைவரும் பதற்றத்துடன், பயந்து விமானத்தில் ஒரு ஓரமாக நின்ற காட்சியை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

மெக்சிக்கோ நாட்டின், வடபகுதியில் உள்ள நோரன் நகரில் இருந்து, தலைநகர் மெக்சிக்கோ சிட்டி நகருக்கு ஏரோமெக்சிக்கோ என்ற விமானம் பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது, இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் தலைக்கு மேல் பொருட்கள் வைக்கும் பகுதியில் இருந்து கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று வெளிப்பட்டு வெளியே தொங்கியது.

இந்தக் காட்சியைக் கண்டதும் அந்த பயணி அலறியடித்து, இருக்கை விட்டு எழுந்து, விமானப் பணிப்பெண்களை அழைத்தார். அதற்குள் அந்த பாம்பு, அந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து ஊர்ந்து செல்லத் தொடங்கியது. இதனால், இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற பயணிகளும் பயத்தில் எழுந்து நகர்ந்தனர். நடுவானில் பயணிகள் அனைவரும் எழுந்ததால், விமானி பதற்றமடைந்தார்.

அதன்பின், மெக்சிக்கோ சிட்டியில் விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே தரையிறக்கப்பட்டு, பயணிகள் அவசரவழியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சூழலில் மெதினா என்ற ஒரு பயணி தன்னிடம் இருந்த வீடியோ கேமிராவால் பாம்பு ஊர்ந்து சென்ற காட்சியையும், பயணிகள் அலறியடித்து ஓடும் காட்சியையும் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அது இப்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 5 அடிநீளம் கொண்ட கொடிய பச்சைநிற கட்டுவிரியன் பாம்பு என்று அதில் அந்த பயணி குறிப்பிட்டுள்ளார்.

வன உயிரி பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பாம்பு பிடிக்கப்பட்டது. விமானத்துக்குள் பாம்பு எப்படி வந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். இது போல் மற்றொரு சம்பவம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏரோமெக்சிக்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.