தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். பீட்டா அமைப்பு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மணவிகள் களம் இறங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், வணிகர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், பல்வேறு சமூக நல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து, சிங்கப்பூரில் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவு தெரிவித்து, நாளை இரவு சீனா டவர் பகுதியில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு, தமிழக கலாச்சார நிகழ்வு. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆதரவு கூட்டம் நடைபெற உள்ளது. சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள், சிங்கப்பூரில் வசிப்பவர்கள், மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்களது அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தண்ணீர் மற்றும் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ அல்ல. ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 14ம் தேதியன்று சிங்கப்பூரில் தமிழர் திருநாளான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், அந்நாட்டு பிரதமர் கலந்து கொண்டு, பொங்கலிட்டு மகிழ்ந்தார். இந்த விழா பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெறும் என்பதுகுறிப்பிடத்தக்கது.