இலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு. இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியை தருகிறது. இது உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களிடையே பெரும் உள்ளக் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

 காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என அறிவித்திருக்கும் கோத்தபய ராஜபக்சே, இத்தனை காலம் கழித்துத் தாமதமாகச் சொல்லியிருப்பதன் உள்நோக்க அரசியலை உலகத் தமிழ்ச் சமூகம் கேள்வி எழுப்புகிறது. காணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள்? யாரால் இறந்தார்கள்? அவர்களது உடல்கள் எங்கே?

அவர்களது உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டதா? என்கிற கேள்விகளுக்குச் சிங்கள அதிபர் பதில் சொல்லியே ஆகவேண்டும். நினைத்தாலே நெஞ்சம் பதறித் துடிக்கக்கூடிய 20 ஆயிரம் தமிழர்களது உயிரிழப்பைத் துச்சமாய் நினைத்துப் போகிற போக்கில் கருத்துத் தெரிவித்திருக்கும் சிங்கள அதிபர் கோத்தபயவின் நடவடிக்கை எதனாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசப்பயங்கரவாதம் எனக் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் #JusticeForEelamTamils என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கோத்தபய அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து கதறி வருகின்றனர்.