கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் விலங்குகள் இறந்திருக்க கூடும் எனவும் அல்லது வேறு இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய சூழலுக்கு அவைகள் தள்ளப்பட்டு இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கான உலகளாவிய நிதியம், ஆஸ்திரேலிய காட்டில் நவீன வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்துகளில் ஒன்று இது என தெரிவித்துள்ளது. அந்த தீ விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்ய அந்நிதியம் ஆணையம் ஒன்று அமைத்துள்ளது. அந்த ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட தீ ஆஸ்திரேலிய மாநிலங்களை கடுமையாக பாதித்தது, அதில் சுமார் 33 பேர் அங்கு உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் மற்றும் தவளைகள் என ஏராளமான ஜீவராசிகள் கொல்லப்பட்டன. ஜனவரி மாதம் தீவிபத்து உச்சத்தில் இருந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலத்தில் 125 கோடி விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர். 

இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டது ஆஸ்திரேலியா, ஆனால் அங்கு ஒட்டுமொத்த தேசத்திலும் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். முதல் ஐந்து பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடிக்கும் நாடாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. இரும்பு, தங்கம், நிலக்கரி என கனிம வளங்களை ஒருங்கே பெற்ற நாடாகவும் ஆஸ்திரேலியா உள்ளது. இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து தெரிவித்துள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் டிக்மேன், தீக்கு இறையான சுமார் 113 வகையான விலங்குகளை அரசு அடையாளம் கண்டுள்ளது என கூறியுள்ளார், புதிய புள்ளி விவரங்களின் படி 1,146 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு, அதாவது இங்கிலாந்துக்கு சமமான பரப்பளவிற்கு  தீ விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், 300 மில்லியன் விலங்குகள் தீயில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய தொகை எனவும், யூகித்து பார்க்க முடியாத பேரழிவு எனவும் அவர் கூறியுள்ளார்.

விலங்குகளின் இறப்பை சரியாக மதிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள அவர்,. இருப்பிடத்திற்கும், உணவிற்கும் இந்த வனத்தையே சார்ந்து இருந்ததால் அவைகள் இங்கிருந்து தப்பி ஓடி இருக்க வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சுமார் 30% அளவுக்கு விலங்குகள்  இயற்கை வாழ்விடங்களை இழந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத பேரழிவில் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் என ஏராளமான உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளன, இந்நிலையில் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழ்விடங்களை புனரமைக்க ஆஸ்திரேலிய அரசு  262 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி அக்டோபரில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.