பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வா ரியாத் செல்லவுள்ளதாக பாகிஸ்தான்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது.  குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் பன்மடங்காக அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியது செல்லாது என இந்தியா அறிவிக்க வேண்டும் எனவும், இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனவும் இந்தியாவை எச்சரித்துவரும் பாகிஸ்தான்,  காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் சீனாவின் உதவியுடன், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து, அதில் தோல்வி அடைந்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி ஒதுங்கிக் கொண்டன.

இந்நிலையில், இதை இஸ்லாமிய நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று அந்நாடுகளை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. அதாவது ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துபாய், பாகிஸ்தான்,  உள்ளிட்ட 57  நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும், மேலும், அந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதாவது ஐநாவுக்கு பிறகு இரண்டாவது பெரிய அரசுகளுக்கு இடையேயான அமைப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட்டு வருவதால் பாகிஸ்தான் இந்த அமைப்பை இந்தியாவுக்கு எதிராக தலையிட செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. ஆக,  இது குறித்து பாகிஸ்தான் பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த அமைப்பு அத்தகைய மாநாட்டை கூட்ட தயக்கம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி பேசுகையில்,  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு என்பதை நாங்கள் மீண்டும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு  மரியாதையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் அதைக்கூட்ட முடியாவிட்டால், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுடன் நிற்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒரு கூட்டத்தை நடத்த நான் பிரதமர் இம்ரான்கானை வலியுறுத்த உள்ளேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே போல் இம்ரான் கானும் சவுதி அரேயிபியாவை காஷ்மீர் விவகாரத்தில் கடுமையாக எச்சரித்து வந்தார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால்  கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கான எண்ணெய் விநியோகத்தை அடியோடு நிறுத்தியுள்ளது. தான் வழங்கிய 3 பில்லியன் டாலர் கடனையும் திருப்பித்தருமாறு கெடு விதித்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைக்கும் பாகிஸ்தான், சவுதி அரேபியாவை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 

சவுதி அரேபியாவை சமாதானப்படுத்தும் நோக்கில், சவுதி தூதரை கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வா சந்தித்துப் பேசினார். இருப்பினும் அதில் எந்த  விளைவும் ஏற்படவில்லை. சவுதி அரேபியா இது போன்ற கடுமையான நடவடிக்கையை எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, அவசர கால பயணமாக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அது இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பஜ்வா சவுதி அரேபியா செல்லவுள்ளது உண்மைதான் என ராணுவ உயரதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறுகையில், ஆம்... பஜ்வா ரியாத்துக்கு செல்வது உண்மைதான் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் திவாலான நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஒப்புக்கொண்டது.   அதேபோல் சவுதியிடம் பாகிஸ்தான் உதவி கோரிய நிலையில், 6.2 பில்லியன் டாலர் கடனுக்கு சவுதி ஒப்புதல் அளித்தது, அதில் 3 பில்லியன் டாலரை பணமாக வழங்கியது. 

மீதம் உள்ள 3.2 பில்லியன் டாலரை பெட்ரோல்-டீசல் கடனாக வழங்கவும் திட்டமிட்டிருந்தது. அதேபோல் கடனை பாகிஸ்தான் ஒரு வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டுமெனவும் நிபர்ந்தனை விதித்திருந்தது. இதுவரை பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் மட்டுமே கடனை திருப்பி செலுத்தி உள்ளது, அதற்காக அது சீனாவிடம் இருந்து கடன் வாங்கியுள்ளது. சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்ததால், அதன் லாபத்தில் 72% இழந்துள்ளது. இதனால் கடனை உடனே திருப்பி செலுத்துமாறு, பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருகிறது. மறுபுறம் இம்ரான்கான் அரசாங்கத்தின் கருவூலம் காலியாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா சவுதி விரைய உள்ளார். ஆனால் சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு இனி எந்தவித சலுகையும் காட்டாது என கூறப்படுகிறது.