சவுதி அரேபியாவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல ஆண்டுகளாக இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது. ஆனால், இளவரசர் முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பிறகு பெண்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குதல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. 

கச்சா எண்ணெய் கிடங்குகள் கடந்த மாதம்  தாக்கப்பட்டதை தொடர்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் வளங்களை மட்டும் சார்ந்திருக்காமல் மற்ற துறைகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு சவுதி தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்குவதற்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கியது.

இதற்கிடையே, சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டல் அறைகளில் இணைந்து தங்கும் வெளிநாடுகளை சேர்ந்த ஆண் - பெண்கள் தங்கள் உறவு முறைக்கான ஆதாரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. சவுதியில் உறவு முறை இல்லாத நபர்களுடன் பாலியல் ரீதியிலான செயல்களில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டமும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா வரும்போது இங்குள்ள ஓட்டல்களில் தங்கும் வெளிநாடுகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் தங்கள் உறவு முறைக்கான ஆதாரங்களை இனி சமர்ப்பிக்க தேவையில்லை என சவுதி அரசு தெரிவித்துள்ளது. சவுதியை சேர்ந்த பெண்கள் உரிய ஆவணங்களை காண்பித்து ஓட்டல்களில் தனியாக அறையெடுத்து தங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிலும் பழமைவாத கொள்கையில் இருந்து சற்றே வெளியேறிவரும் சவுதி அரேபியாவில் மதுவிலக்கு கொள்கை மட்டும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.