ஏழை எளிய நாடுகள் வயிற்றில் பால் வார்த்த மருந்து கம்பெனி.!! 100 நாடுகளுக்கு 100 மில்லியன் மாத்திரைகள் நன்கொடை
வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் தங்கள் நிறுவனம் களமிறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனமான சனோஃபி சுமார் 100 நாடுகளுக்கு 100 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது . தற்போது வரை 50 நாடுகளுக்கு அது நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது , உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது 150க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . குறிப்பாக இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதித்துள்ளன உலகம் முழுக்க 16 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதற்கு உயிரிழந்துள்ளனர் . இதுவரை இந்த வைரஸை கட்டுப்படுத்த பிரத்தியேக தடுப்பூசிகள் ஏதும் இல்லாததால் வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது, இதை கட்டுப்படுத்தாவிட்டால் மேலும் பல ஆயிரம் பேர் இறக்க கூடுமென உலக நாடுகள் அஞ்சி வருகின்றன.
இந்நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை வழங்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்தார் , இந்நிலையில் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அந்த மருந்து கொரோனாவால் பாதித்தவர்களை குணமாக்குகிறது என்ற அடிப்படையில் பலநாடுகள் அம்மருத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் , ஆனாலும் அதற்கு இதுவரை அறிவியல்பூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என்பது தனிக்கதை, ஆனாலும் தற்போதைக்கு அந்த மருந்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்துகிறது என்ற அடிப்படையில் அந்த மருந்தை உலகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிடம் சுமார் நாற்பதுக்கும் அதிகமான நாடுகள் மருந்தை தங்களுக்கு வழங்கி உதவிட வேண்டுமென கோரிக்கை வைத்ததையடுத்து பல்வேறு நாடுகளுக்கு மாத்திரைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது . இந்நிலையில் அமெரிக்கா , இத்தாலி , இஸ்ரேல் , போன்ற நாடுகளுக்கு இந்தியா மாத்திரைகளை அனுப்பி வைத்துள்ளது .
இந்நிலையில் குளோரோகுயினின் தேவை அதிகரித்துள்ளதால், தற்போது குளோரோகுயின் மாத்திரைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற மருந்து நிறுவனம், அந்த மருந்தை 100க்கும் அதிகமான ஏழை எளிய நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது. இந்நிலையில் பாரிசில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து அதன் தலைமைச் செயல் அதிகாரி பால் ஹட்சன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் , அதில் , புதிதாக தாக்கி உள்ள கோவிட்-19 வைரஸ் சுகாதார நெருக்கடி யை மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது . சர்வதே நாடுகளுக்கிடையே மாத்திரை தட்டுப்பாட்டால் சச்சரவுகள் ஏற்படும் சூழல் உள்ளது எனவே அது போன்ற நெருக்கடிகளை களையவும் , வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் தங்கள் நிறுவனம் களமிறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து ஒரு உயிர் காக்கும் திறன் கொண்டது என ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இந்த மருந்து உட்கொள்வதால் ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என புகார் எழுந்த நிலையில் சுமார் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஜித்ரோமேக்ஸுடன் இணைத்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்க நியூயார்க் ஆளுநர் கியூமோ ஒப்புக் கொண்டதையடுத்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது