தென் கொரியாவின் மிகப்பெரிய மின்னனு தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கின் துணைத்தலைவர் ஜே ஒய் லீ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஸ்மார்ட்போன் விற்பனை, மெமரி சிப், உள்ளிட்ட பல்வேறு மின்னனு பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துவரும் சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானவுடன், அந்த நிறுவனத்தின் பங்குகள் சர்வதேச அளவில் படுமோசமாக வீழ்ந்தன.
கடந்த 2015ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் துணை நிறுவனங்களை சி அன்ட் டி மற்றும் சீல் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றை இணைப்பதற்காக அதிபர் பார்க் கியூன் ஹி மற்றும் அவரின் தோழிக்கும் ஏறக்குறைய ரூ.250 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த ஊழல் தொடர்பாகவும், அதிபர் பார்க் கியூன் ஹி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லீ ஜே யோங், வழக்கில் சாம்சங் நிறுவனத்தலைவர் லீ ஊழல் செய்வதற்கான முகாந்திரங்கள், ஆதாரங்கள் இருக்கின்றன, அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார். அதற்கு பதில் அளித்த லீ, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இதையடுத்து, சாம்சங் நிறுவனத் தலைவர் லீ யை கைது செய்து 10 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நாட்டின் கோடிஸ்வர குடும்பங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தலைவர் லீ, சிறையில் 6.56 சதுர அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லீ தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “ இப்போது வரை அவரை ஜாமீனில் எடுப்பது குறித்து ஏதும் ஆலோசிக்கவில்லை. விரைவில் அவரிடம் பேசி முடிவு எடுப்போம்'' எனத் தெரிவித்தார்.
