ரஷியா நாட்டின் ஹெல்காப்டர் சைபீரியாவின் வடமேற்குப் பகுதியில் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர் என ரஷியா அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷிய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
3 விமானிகள் உள்ளிட்ட 22 பயணிகளுடன் ரஷியாவின் எம்.ஐ.8 ஹெலிகாப்டர் சைபீரியாவின் கிராஸ்னோயார்ஸ் நகரில் இருந்து யாமலோ நெநெட்ஸ்கீ பகுதியில் உள்ள உரின்கோய் நகருக்கு வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு புறப்பட்டது. அப்போது நோவி உரின்கோய் நகரில் இருந்து 80 கிலோமீட்டருக்கு முன்பாக வந்து கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார்.
அப்போது, ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை மீறி, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் நோவி உரின்கோய் மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்ப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 22 பேரில் 19 பயணிகள் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உரின்கோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாதுகாப்பு விதமுறைகளை மீறியது அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக கிரிமினல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி, தகவல் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்தபின் மற்ற விவரங்கள் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து: 19 பேர் பலி
Latest Videos
