#UnmaskingChina: அமெரிக்கா பாணியில் ரஷ்யா...!! இந்திய-சீன எல்லை பிரச்சனை ஆபத்தானவை என கருத்து..!!
இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை ஆரம்பத்திலேயே தீர்க்க உலக அளவில் ரஷ்யா அதிக ஈடுபாடு காட்டியதாக அந்நாட்டின் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை ஆரம்பத்திலேயே தீர்க்க உலக அளவில் ரஷ்யா அதிக ஈடுபாடு காட்டியதாக அந்நாட்டின் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ரஷ்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் இகோர் மோர்குலோவ் கூறியுள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பத்திரிக்கை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்திய-சீன எல்லையில் இருந்து வரும் தகவல்களை ரஷ்யா உன்னிப்பாக கவனித்து வருகிறது என கூறியுள்ளார், ஏற்கனவே அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ள நிலையில் ரஷ்யாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி, சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ரஷயா உள்ளிட்ட நாடுகள் இதுகுறித்து கருத்து கூறி வருகின்றன. இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பாலா வெங்கடேஷ் வர்மா, ரஷ்ய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இகோர் மோர்குலோவ்வுடன் சந்தித்து விவாதித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதல் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது என்று கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த உரையாடலைப் பற்றி முழு விபரத்தை தெரிவிக்கவில்லை.
ஆனால் ரஷ்ய இராஜதந்திர வட்டாரங்கள் இரண்டு இமயமலை அண்டை நாடுகளுக்கிடையேயான பதற்றங்களை முன்கூட்டியே தீர்ப்பதில், மாஸ்கோ உலக அளவில் "அதிக கவனம்" செலுத்தியது என்று கூறியுள்ளன. கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்திய-சீன எல்லையிலிருந்து வரும் தகவல்கள் "மிகவும் ஆபத்தானவை" என்று கூறினார். உண்மையிலேயே, இந்திய-சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகிறோம். ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்கவும், முன்கணிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், இரு நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வல்லவை என்று நாங்கள் கருதுகிறோம் என கூறியுள்ளார்.