உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் அடிக்காதது அதிசயம் என ரஷ்யா கிண்டல் செய்துள்ளது. வெள்ளை மாளிகையில் டிரம்ப், ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் உண்டானது.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், உகரைன் அதிபர் ஜெலன்ஸிக்கும் இடையே நடந்த வாக்குவாதம் இப்போது உலகளவில் பேசும்பொருளாகியுள்ளது. இதை வைத்து ஜெலன்ஸ்கியை டொனால்ட் டிரம்ப் எப்படி அடிக்காமல் விட்டார்? என ரஷ்யா கிண்டல் செய்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போரில் மாற்று நிலைப்பாட்டை கையில் எடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போருக்கு இனி செலவு செய்ய தயாராக இல்லை என்றும் பணத்துக்கு பதிலாக உக்ரைனில் இருக்கும் அரிய வகை கனிமவளங்களை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் எனவும் உக்ரைனுக்கு நிபந்தனை விதித்தார்.

இது தொடர்பான கனிமள ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்காகவும், உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேசுவதற்காகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலனஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் டிரம்ப், ஜெலன்ஸ்கி சந்தித்து பேசியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெலனஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து பாதியில் வெளியே அனுப்பப்பட்டார்.

அதாவது போருக்கு முன்பாக உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எந்த நாடும் தடுக்கவில்லை என்றும் இந்த போரில் தாங்கள் தனித்து நிற்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஆனால் இதை மறுத்த டிரம்ப், ''அமெரிக்கா உங்களுக்கு 350 பில்லியன் டாலர்களை வழங்கினோம். நாங்கள் உங்களுக்கு இராணுவ உபகரணங்களையும், நிறைய ஆதரவையும் வழங்கினோம். எங்கள் இராணுவ உபகரணங்கள் இல்லையென்றால், இந்த போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்'' என்று தெரிவித்தார்.

YouTube video player

டொனால்ட் டிரம்ப், ஜெலன்ஸ்கியின் இந்த மோதல் அமெரிக்காவின் புதிய கூட்டாளியான ரஷ்யாவுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் புதிய நிர்வாகத்துடன் உறவுகளை உருவாக்கவும், ஜெலென்ஸ்கியை இழிவுபடுத்தவும், அவரது சட்டபூர்வமான தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயற்சிக்கும் ரஷ்யாவுக்கு இது மாபெரும் பரிசாக அமைந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்தது உக்ரைன் அதிபருக்கு நடந்த சரியான அடி என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான மெட்வெடேவ், ''இது ஜெலென்ஸ்கிக்கு கிடைத்த ஒரு 'திடமான அறை. உக்ரேனிய தலைவர் தனக்குத் தகுதியானதைப் பெற்றார். அவர் வெள்ளை மாளிகையில் தற்கொலை செய்து கொண்டார்'' என்று தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ''உலகெங்கிலும் உள்ள செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட வாக்குவாதத்தின் போது டிரம்பும் வான்ஸும் ஜெலென்ஸ்கியை எப்படி அடிக்காமல் இருந்தனர் என்பது அதிசயமாக உள்ளது'' என்று கூறியுள்ளார். 

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான விரைவான நல்லிணக்கம் உக்ரைனையும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது. இது உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டிரம்ப், ஜெலன்ஸ்கி மோதலை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக் எப்போதும் இருப்போம் என்று தெரிவித்துள்ளனர். உக்ரைன் பாதுகாப்பு மீதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கோபமாக கத்திய டிரம்ப்! பாதியில் வெளியேறிய ஜெலன்ஸ்கி! வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?