ஐ.நா பொதுச்செயலாளருக்கு ‘பயத்தை’ காட்டிய ரஷ்யா. உக்ரைன் விசிட்டில் திடீர் தாக்குதல்.. அப்போ ரஷ்யா கதி ?
Ukraine War :உக்ரைன் மீதான போரில் ரஷ்யா என்ன செய்யப்போகிறது என ஊகிக்க முடியாத வகையில் இப்போது நாளும் திருப்பங்கள் நேரிட்டு வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாதநிலையில், கிழக்கு உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கவனம் செலுத்தி வந்தன.
டான்பாஸ் பிராந்தியத்தில் பல நகரங்களையும், கிராமங்களையும் ரஷ்யப்படைகள் வசப்படுத்தின. இந்நிலையில் இந்த போர் நிலவரங்களை பார்வையிட ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் உக்ரைன் சென்றார். அங்கு புச்சா நகரில் ரஷ்ய படைகள் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷ்யா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக அவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதிக்கு சென்ற போது ரஷ்யாவின் ஏவுகணைகள் வான்வழி தாக்குதலை தொடுத்தன. இதனை தொடர்ந்து பலத்த சத்தம் எழுந்தது. நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். 25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலால் 2 தளங்கள் சேதமடைந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வான்வரை சென்றது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் ஐநா தலைவர் ஆன்டனியோ கட்டிரெஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருந்த இடத்தில் இருந்து 3.5 கி.மீ. தொலைவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி, ஐ.நா. மற்றும் அந்த அமைப்பினை ரஷ்ய தலைமை அவமதிக்கிறது என்பதற்கு இந்த தாக்குதலே அதிக விளக்கம் அளிக்கும் என கூறியுள்ளார். கீவ் நகர தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, 'உலகளாவிய அமைப்புகள் மீது ரஷ்யாவின் உண்மையான அணுகுமுறையை, ஐ.நா.வை ரஷ்ய அதிகாரிகள் அவமானப்படுத்தும் முயற்சியை இது காட்டுகிறது' என்று கூறினார். இந்த ஏவுகணை தாக்குதலை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவிக்கையில், 'கீவில் ராக்கெட் ஆலை மீது துல்லிய ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. 10 ராணுவ கட்டமைப்புகள் மீதும் வான்தாக்குதல் நடந்தது. 3 மின்நிலையங்கள் அழிக்கப்பட்டன' என கூறியது. ஆனால் அடுக்கு மாடி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி வாய் திறக்கவில்லை. இந்த சம்பவம் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!