கொழும்பு, அக்.19-

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விசாரணையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட, விடுதலைப் புலி அமைப்பைச் சேர்ந்த போராளி ராபர்ட் வெலிந்தன் குடும்பத்திற்கு, இலங்கை ராணுவம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ஏற்று சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி ரூ.20 லட்சம் இழப்பீட்டை, வெலிந்தன் குடும்பத்திற்கு வழங்கினார்.

சுட்டுக் கொலை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பருத்திதுறையில் கடந்த 1998-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த ராபர்ட் வெலிந்தன் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் வழியில், இலங்கை ராணுவத்தால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, வெலிந்தன் சம்பவத்தன்று தப்பி செல்ல முயன்றார் என்றும் அப்போது ராணுவத்தினர் சுட்டதில் தவறுதலாக அவர் மீது குண்டுகள் பாய்ந்து விட்டது என்றும் இலங்கை ராணுவத்தினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். இந்த வழக்கில் ஆகஸ்டு மாதம், நீதிபதி தீர்ப்பளித்தார்.

ரூ.20 லட்சம் இழப்பீடு

அந்த தீர்ப்பில், வெலிந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை ராணுவ ெலப்டினன்ட்டுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும் அவரை ராணுவத்தில் இருந்து 10 ஆண்டுகள் சஸ்பெண்டு செய்தும் உத்தரவிட்டார்.

மேலும் ரூ.20 லட்சத்தை, இழப்பீடாக வெலிந்தனை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார். கொழும்பு உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று, இலங்கை முன்னாள் ராணுவ வீரர் ரூ.20 லட்சத்தை நேற்று வழங்கினார்.

40,000 பேர் கொலை

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. குற்றம் சாட்டி உள்ளது. இதனை இலங்கை அரசு இதுவரை ஏற்கவில்லை.