அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரமபுக்கு, ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், சிறுமிகளும் சகோதரத்துவத்தை உணர்த்தும் 1008 ராக்கி கயிறுகள் அனுப்பி உள்ளனர்.

தனியார் தொண்டு நிறுவனம் கழிப்பறை கட்டிக்கொடுத்தபின், அந்த கிராமத்துக்கு ‘டிரம்ப் கிராமம்‘ என்று இந்த கிராமத்துக்கு பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய மேவாட் மண்டலத்தில் மரோரா எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு 95 கழிப்பறை ‘சுலப்’ எனும் அமெரிக்க  தனியார் தொண்டு நிறுவனம் கட்டிக்கொடுத்தது.  இதையடுத்து, இந்த கிராமத்தின் பெயரை டிரம்ப் கிராமம் என்று அந்த ஊர் மக்கள் மாற்றிக்கொண்டனர்.

ஆனால், இது போல் பெயர்மாற்றக் கூடாது என்று கூறிய மாவட்ட நிர்வாகம், அந்த கிராமத்தில் வைக்கப்பட்டு இருந்த பதாகைகளைகள், பெயர்பலகைகளைஅகற்றியது.

இந்நிலையில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் ‘ரக்‌ஷாபந்தன்’ பண்டிகைக்காக இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ராக்கி தயாரித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், “ அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் புகைப்படம் கொண்ட 1001 ராக்கிகளை இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் தயாரித்துள்ளனர், பிரதமர்  மோடிக்கு 501 ராக்கி கயிறுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியையும், டிரம்பையும், பெண்களும், சிறுமிகளும் மூத்த சகோதரர்களாக நினைத்து இந்த கயிறை அனுப்பி உள்ளனர். இந்த கயிறுகள் அனைத்தும் அமெரிக்க அதிபர்  டிரம்புக்கு 7-ந்தேதி கிடைக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கிராமத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அழைப்பிதழும் அனுப்பப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ரேகா ராணி கூறுகையில், “ 3 நாட்களில் 150  ராக்கி கயிறுகளை தயார் செய்து டிரம்ப் சகோதரருக்கு அனுப்பினேன். எங்கள் கிராமத்துக்கு, பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் வர வேண்டும் எனக் கேட்டு அழைப்பிதழும்  வௌ்ளை மாளிகைக்கு அனுப்பி இருக்கறேன்’’ எனத் தெரிவித்தார்.