ரஷ்யாவில் நாள் முழுக்க இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப பிரத்யேகமான சேனல் வைத்திருப்பதாகவும், இந்திய சினிமா மிகவும் பிடிக்கும் எனவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Russian President Vladimir Putin Loves Indian Films : சோச்சியில் நடைபெற்ற வல்தாய் கலந்துரையாடல் மன்றத்தின் முழு அமர்வில் பேசிய புதின், இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு 'சிறப்பு' உறவைப் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்திய சினிமாவுக்கு ரஷ்யாவில் நல்ல மவுசு இருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்காகவே தாங்கள் ரஷ்யாவில் நாள் முழுக்க இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப பிரத்யேகமான சேனல் வைத்திருப்பதாகவும் கூறினார். தங்களுக்கு இந்திய சினிமா பிடிக்கும் என கூறிய புதின், இந்தியாவை தவிர இந்திய படங்களை மட்டும் ஒளிபரப்பும் சேனல் இருக்கும் நாடு என்றால் அது ரஷ்யா மட்டும் தான் என்று பெருமிதத்துடன் கூறினார்.

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தக உறவைத் துண்டிக்க இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா கொடுக்கும் அழுத்தங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி எனது நண்பர். அவர் ஒருபோதும் அழுத்தங்களுக்குப் பணிந்து ரஷ்யாவுடனான உறவைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை எடுக்க மாட்டார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ரஷ்யாவின் தலையீடு மற்றும் நம்பகத்தன்மை குறித்து நரேந்திர மோடிக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய மக்கள் தங்கள் அரசியல் தலைமையின் முடிவுகளைக் கவனிக்கிறார்கள் என்றும் புதின் கூறினார்.

இந்தியா உடனான உறவு குறித்து பேசிய புதின்

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒருபோதும் பிரச்சினைகளோ, அழுத்தங்களோ இருந்ததில்லை என்றும் புதின் கூறினார். ரஷ்ய எண்ணெயை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியாவும் சீனாவும் ஏற்காது. தங்களை அவமானப்படுத்திக் கொள்ள இந்தியாவும் சீனாவும் அனுமதிக்காது என்று புதின் கூறினார். ரஷ்யாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ரஷ்யாவுடன் நட்புறவில் உள்ள நாடுகளை குறிவைத்து அமெரிக்கா விதிக்கும் கட்டண அச்சுறுத்தல்களுக்கு புதின் பதிலளித்தார். அமெரிக்காவின் இத்தகைய முயற்சிகள் பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் புதின் எச்சரித்தார்.

ரஷ்ய எண்ணெய் இல்லாமல் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். ரஷ்யா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தினால், ஒரு பீப்பாய் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயரும் என்று புதின் எச்சரித்தார். ரஷ்யாவின் வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா அதிக கட்டணங்களை விதித்தால், அது சர்வதேச அளவில் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். மேலும், வட்டி விகிதங்களை உயர்வாக வைத்திருக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் கட்டாயப்படுத்தப்படும் என்றும் புதின் எச்சரித்தார்.