அமெரிக்‍க அதிபராக குடியரசுக்‍ கட்சி வேட்பாளரான பிரபல தொழிலதிபர் Donald Trump தேர்ந்தெடுக்‍கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் ஆயிரக்‍கணக்‍கானோர் 2-வது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சகிப்புத்தன்மையின்மை, ஆணாதிக்‍கம், இனவாதம் என சர்ச்சைக்‍குரிய வகையில் அமெரிக்‍காவின் 45-வது அதிபராக தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ள Donald Trump இருந்துவருவதாக அமெரிக்‍காவில் பரவலாக மக்‍களிடையே அதிருப்தி நிலவுகிறது.

இதனை வெளிப்படுத்தும் வகையில், அந்நாடு முழுவதும் 2-வது நாளாக இன்றும் ஆயிரக்‍கணக்‍கானோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

அமெரிக்‍காவில் மிக அதிக மக்‍கள் தொகையைக்‍ கொண்ட நகரமான Newyork-ல் உள்ள Trump Tower முன்பு ஆர்ப்பாட்டக்‍காரர்கள் திரண்டுநின்று எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று, Washington D.C-ல் உள்ள Trump-க்‍கு சொந்தமான சர்வதேச ஹோட்டல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டக்‍காரர்கள், Trump-க்‍கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

இதேபோல், மேரிலாண்ட் மாகாணத்தில் Baltimore, Colorado மாகாணத்தில் Denver, Oregon மாகாணத்தில் Portland ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், California மாகாணத்தில் Los Angeles, San Fransisco ஆகிய நகரங்களில் ஏராளமானோர் வீதிகளுக்‍கு வந்து Trump-க்‍கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அமெரிக்‍க அதிபர் வசிக்‍கும் வெள்ளை மாளிகை முன்பு எதிர்ப்பு பதாகைகளுடன் ஏராளமானோர் திரண்டனர். புதிய அதிபராக தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ள Trump-க்‍கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் செனட்சபை தலைவர் ஆகியோரை Capital Hill Club என்ற இடத்தில் Trump சந்தித்து பேசினார். அப்போது, அவருக்‍கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

நாடுமுழுவதும் Trump எதிர்ப்பு அலை வீசிவரும் நிலையில், அதிபரின் மனைவியான Melania Trump, வெள்ளை மாளிகைக்‍கு முதன்முறையாகச் சென்றார். அவரை Michelle Obama அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

இதனிடையே, தற்போதைய அதிபர் ஒபாமாவை, Donald Trump சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னோடு கடைசிவரை விசுவாசமாக இருந்தவர்களுக்‍கு அமைச்சரவையில் உயர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், துணை அதிபராக தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ள Mike Pence, தனது குடும்பத்தினருடன் Indiana மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரான Indianapolis நகருக்‍கு வருகை தந்தபோது, அங்குள்ள வழக்‍கப்படி வானில் நீரை பீய்ச்சியடித்து, உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.