பிலிப்பைன்சில் சிறைக்‍குள் துப்பாக்‍கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளியை சுட்டுக் கொன்றுவிட்டு  150-க்‍கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் North Cotabato சிறைச்சாலையில் ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்ட கைதிகள் அடைக்‍கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையின் பின்புறத்தில் உள்ள சுவரை இடித்து அதன் வழியாக உள்ளே நுழைந்த துப்பாக்‍கி ஏந்திய மர்மநபர்கள், சிறைப் பாதுகாவலர்களை நோக்‍கி சரமாரியாக துப்பாக்‍கிச்சூடு நடத்தினர்.

இதில் காவலாளி ஒருவர் உயிரிழந்தார். போலீசார் பதிலடி தாக்‍குதலில் ஈடுபட்ட போதிலும், 158 கைதிகள் தப்பிச் சென்றதாகவும், 4 பேரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்ததாகவும், தேசிய போலீஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தப்பிச்சென்ற கைதிகளைப் பிடிக்‍க போலீசார் பல குழுக்‍களாக பிரிந்து தேடுதல் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளனர்.