கிளம்பிட்டாருய்யா.. கிளம்பிட்டாருய்யா... பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் பயணம்..!
இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்டு சென்றார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, இந்தியா, சீனா, ஜப்பான், கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 8 நாடுகள் கிழக்காசிய உச்சி மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவை வரும் 14ம் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிருந்து தனி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் புறப்பட்டார்.
இந்தப் பயணத்தின்போது, இரு தரப்புக்கும் இடையே வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அது மட்டுமன்றி, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அதற்கிடையே கிழக்காசிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மாநாட்டில் வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு ஆகியவற்றை மேமப்டுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.