இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்று கொண்டதையடுத்து, தமிழின தலைவர் பிரபாகரனை கொன்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன முக்கிய பதவி வழங்கப்பட்டடுள்ளது. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே நேற்று அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், மகிந்த ராஜபக்சே அதிபராக பதவி வகித்த காலத்தில் கோத்தபய ராஜபக்சேதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தான் 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுடான இறுதிப் போரின் போது தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபாய ராஜபக்சே, அதிபராக பதவி ஏற்ற பின்னர் நியமித்த முதலாவது நியமனம் இதுவாகும். 

அப்போது, 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுடான இறுதிப் போர் நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த போரின் போது 53-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர்தான் கமால் குணரத்ன. பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவு தான் கொன்றதாகவும், பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்றும் அப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இவர் நந்திகடலுக்கான பாதை என்ற நூலையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.