சிறைக் கைதிகளை விடுவிக்க பாப்புலர் பிரண்ட் கெடு..!! ஏழு தமிழர்களுக்காக வைத்த அதிரடி கோரிக்கை..!!
பல ஆண்டுகளாக சிறையில் கழித்துக் கொண்டிருக்கும் சிறைவாசிகள் பல்வேறு மன அழுத்தங்களுடன் வாழ்வை கழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிறைவாசிகளின் விடுதலை எதிர்பார்ப்பும் ஒவ்வோர் ஆண்டும் தள்ளிப்போவது அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது
அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகள் சிறையில் கழித்த முஸ்லிம்கள், ஏழு தமிழர்கள் உள்ளிட்ட ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்யவேண்டி மாநிலம் முழுவதும் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-
செப்டம்பர் 15, அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று கடந்த காலங்களில் நன்னடத்தை விதியின்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் நடைமுறை தமிழகத்தில் இருந்து வருகின்றது. இவ்வாண்டும் 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகளை தமிழக அரசு நன்னடத்தை அடிப்படையில் எந்த பாகுபாடுமின்றி விடுவிக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் விடுதலை ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் சிறைக் கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர்.
இதற்கு முன்னாள் பலரும் விடுவிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக சிறையில் கழித்துக் கொண்டிருக்கும் சிறைவாசிகள் பல்வேறு மன அழுத்தங்களுடன் வாழ்வை கழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிறைவாசிகளின் விடுதலை எதிர்பார்ப்பும் ஒவ்வோர் ஆண்டும் தள்ளிப்போவது அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்கும் சிறைவாசிகள் விடுதலை அறிவிப்பை அவர்களுடைய குடும்பங்களும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கு மேலும் அவர்களின் விடுதலையை தள்ளிப் போடாமல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு குறிப்பாக 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள், ஏழு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். இந்த ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக செப்டம்பர் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் திரளாக கலந்து காெள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.