தனி மனிதனாய் ஈஸ்டர் கொண்டாடிய போப்..! இதுதான் உலகம்
வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையை வாடிகனில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் இந்த முறை வாடிகனில் போப் மட்டும் தனி மனிதனாக ஈஸ்டரை கொண்டாடினார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி கடந்த 10ந் தேதி கடைபிடிக்கப்பட்டது. கொரோனான் அச்சுறுத்தலால் உலகம் முழுதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஊரடங்கு காரணமாக தேவாலயங்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்தனர். அதைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த மூன்றாவது நாள்(இன்று) ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
உலக கிறிஸ்தவர்களின் புனிதஸ்தலமான வாட்டிகனில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஸ்டர் அன்று ஒன்றுதிரண்டு பிரார்த்தனையில் கலந்துகொள்வார்கள். ஆனால் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெய்னுக்கு அடுத்தது இத்தாலிதான். இத்தாலியில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 20 ஆயிரம் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி உட்பட உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொண்டாட்ட மனநிலையில் மக்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் இத்தாலியிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
எனவே ஈஸ்டர் தினமான இன்று, வாட்டிகனில் நடந்த ஈஸ்டர் பிரார்த்தனையில் போப் ஃபிரான்ஸிஸ் மட்டுமே கலந்துகொண்டார். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கூடும் ஈஸ்டர் பண்டிகையன்று வாட்டிகன் வெறிச்சோடியது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் குழுமியிருக்க நடந்துவந்த ஈஸ்டர் பிரார்த்தனை, இம்முறை யாருமே இல்லாமல் நடந்தது. எனவே நூற்றாண்டுகால பாரம்பரியத்தை உடைத்து, ஈஸ்டர் பிரார்த்தனையை, மக்கள் வீடுகளில் இருந்து பார்க்க ஏதுவாக நேரடி ஒளிபரப்பு செய்ய போப் ஃபிரான்ஸிஸ் அனுமதியளித்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.