கொரோனா ஊரடங்கிற்கு எதிராக போராட்டம்.. 100க்கும் அதிகமானோரை கொத்தா தூக்கிய போலீஸ்
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கொரோனா ஊரடங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கிவிட்டது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகளை மட்டுமல்லாமல், கடும் பொருளாதார பேரழிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றன.
கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய நாடுகள். இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெய்ன், ஜெர்மனி, ஃபிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 40% ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க சமூக விலகல் தான் ஒரே வழி என்பதால் உலகின் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
ஜெர்மனியில் இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தலைநகர் பெர்லினில் திடீரென நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில், ரோசா லக்சம்பெர்க் சதுக்கத்தில் ஊரடங்கை விலக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் சுதந்திரமே பறிபோய்விட்டது, இதெல்லாம் மருந்து கம்பெனிகளின் லாபி, சுதந்திரம் தேவை என்றும் வலியுறுத்தினர். சுதந்திரம் மட்டுமே எல்லாவுமாக ஆகிவிடாது; ஆனால் சுதந்திரம் இல்லாத எதுவுமே பயனற்றது என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊரடங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். போராட்டக்காரர்கள் மறுத்ததால் இருதரப்புக்கும் கைகலப்பானது. அதில் சில போலீஸாரும் காயமடைந்தனர். இதையடுத்து நூற்றுக்கும் அதிகமானோரை போலீஸாரை கைது செய்து போராட்டத்தை கலைத்தனர்.