PM Narendra Modi meets US President in Manila to hold formal meet tomorrow
‘ஆசியன்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்குப் போய் சேர்ந்தார். மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மோடி சந்தித்து பேசினார். சீனப்பிரதமர், ஜப்பான் பிரதமர் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
ஆசியான் மாநாடு
15-வது ‘ஆசியான்’ மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்.

இந்த மாநாட்டில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் லீ கெ கியாங், ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் கியூயன் ஷூயாங் புக், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
டிரம்புடன் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் மாநாட்டில் பங்கேற்கிறார். தற்போது ஆசிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே மாநாட்டின் இடை வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

தென் கிழக்கு ஆசிய மாநாடு
மேலும் ரஷிய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ், சீன பிரதமர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஆனால், இது மரியாதை நிமித்தமாகவே இருந்தது. அதிகாரப்பூர்வ சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை.
தொடர்ந்து நாளை நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். மேலும், இந்த ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்ட 50-வது ஆண்டு விழாவிலும் மோடி பங்கேற்கிறார்.

13-ந்தேதி நடைபெறும் ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு, 14-ந்தேதி பிராந்திய நாடுகளுக்கு இடையிலான முழுமையான பொருளாதார கூட்டுறவு மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஆசியான் நாடுகளுடன் இந்தியா தனது நட்புறவையும், வர்த்தக உறவையும் வலுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
ேமலும், பிலிப்பைன்ஸ் உள்ள இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார், இந்திய தூதரம் அளிக்கும் வரவேற்பு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். இறுதியாக மாகாவீர் பிலிப்பைன் அமைப்பு சார்பில் சர்வதேச அரிசி ஆய்வுமையத்தையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
