கிரீஸ் நாடு சென்றடைந்தார் பிரதமர் மோடி; இந்தியா வம்சாவழியினர் உற்சாக வரவேற்பு!!
தென் ஆப்பிரிக்காவில் நடத்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு இருந்த பிரதமர் மோடி இன்று கிரீஸ் நாட்டுக்கு சென்றார்.
கிரீஸ் நாட்டுக்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார். கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''தென் ஆப்ரிக்காவில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கிரீஸ் நாட்டுக்கு செல்வார். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமருக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார். சமீப காலமாக கிரீஸ் நாட்டுடன் இணைந்து கடல் போக்குவரத்து, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு இன்று சென்றார். முன்னதாக தென் ஆப்ரிக்காவில் நடந்த 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். உறுப்பு நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்த இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
இன்று கிரீஸ் நாட்டிற்கு சென்ற மோடியை அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் வரவேற்றார். "ஏதென்ஸில் தரையிறங்கினேன். இந்தியா-கிரீஸ் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கில் பயனுள்ள கிரீஸ் பயணத்தை எதிர்நோக்குகிறேன். நான் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து பேச இருக்கிறேன். மேலும் இந்திய சமூகத்தையும் சந்திக்க இருக்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் ஒரு பதிவில், ''கிரீஸில் உள்ள இந்திய சமூகம் என்னை அன்புடன் வரவேற்றது. இங்கு பல சீக்கிய சகோதரிகள் மற்றும் சகோதரர்களைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். உண்மையான சீக்கிய கொள்கைகளை நிலைநிறுத்துபவர்கள் என்பதால், அவர்கள் இங்கு மிகவும் இணக்கமாக வாழ்கின்றனர்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.