காலநிலை தொடர்பான COP33 உச்சி மாநாடு 2028ல் இந்தியாவில் நடத்துவதற்கு பிரதமர் மோடி முன்மொழிவு!!
COP28 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாயில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 2028-ல் COP33-ஐ இந்தியாவில் நடத்துவதற்கு முன்மொழிந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இன்று COP28 உச்சி மாநாடு துவங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். தொடக்க விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி பேச அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு மரியாதையாக கருதப்படுகிறது. ஐநாவின் உலக காலநிலை செயல் உச்சி மாநாட்டில் இதற்கு முன்பும் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார்.
சிறப்பு பேச்சாளராக மோடி இன்று மாலை 3:30 மணிக்கு மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசினார். மேலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர் என்று அறியப்படும் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் பின்னர் கென்யா அதிபர் வில்லியம் ருடோ, துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சவுதி அரேபியா இளவரசர் மொஹம்மது பின் சல்மான் அல் சவுத் ஆகியோர் சந்தித்து பேச இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மாநாட்டின் இரண்டாம் நாளான நாளையும் சில தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருளாதாரம் மற்றும் சூழலியலின் கலவை என்று கூறிய மோடி, 2070-க்குள் மாசு இல்லாத நாடாக அடைவதைத்தான் இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். பிரதமர் இன்று துபாயில் சுமார் 21 மணி நேரம் செலவழித்து நான்கு உரைகளை ஆற்றுகிறார். இரண்டு சிறப்பு நிகழ்வுகள், காலநிலை தொடர்பான ஏழு இருதரப்பு சந்திப்புகளில் கலந்து கொள்கிறார்.
COP28 என்றால் என்ன?
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள அரசுகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காலநிலை அவசரநிலைக்கு உலகளாவிய பதிலை எதிர் நோக்குகின்றன. 1992 UN Framework Convention on Climate Change (UNFCCC)-ன் கீழ், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் "ஆபத்தான காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பதற்கு" ஒரு ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு, மாசற்ற சூழலை உருவாக்குவதற்கு வழிகளை ஏற்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. UNFCCCயின் கீழ் மொத்தம் 197 நாடுகள் உள்ளன.