உலகின் பழமையான மொழி தமிழ் என்று.. நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்!! அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!!
உலகின் பழமையான மொழி எது எனக் கேட்டால் தமிழ் எனக் கூறுங்கள் என்று பெருமிதம் பொங்க பிரதமர் மோடி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு 3 நாள் அரசுமுறை பயணம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்து வரவேற்பளித்தனர். இந்நிகழ்வுகளுக்கு பின்னர் அவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். மேலும் அமெரிக்க அரசின் சார்பிலும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்படி ஒரு நிகழ்வில் இந்திய வம்சாவளி மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:"அமெரிக்காவில் நான் பெற்ற அன்பு அருமையானது. இந்த பெருமை எல்லாமே உங்களை தான் சேரும். கடந்த 3 நாள்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நானும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். நிச்சயமாகவே ஜோ பைடன் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பதை என்னால் கூற முடியும். விரைவில் ஹூஸ்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழ் இருக்கை நிறுவப்படும்"என்று உறுதியளித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசிய வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி, “எப்போதாவது உலகின் பழமையான மொழி எது என்ற விவாதம் வந்தால், எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்” என்று நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தினார்"எனக் குறிப்பிட்டுள்ளார்.