Russia-Ukraine crisis:உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மக்கள்..எப்படி மீட்பது.? பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
Russia-Ukraine crisis:உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது.பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டத்தில் இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா,உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்ததால் எந்நேரமும் போர் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதையடுத்து, நேற்று ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர்தொடுத்தது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது.ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று முழுவதும் உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்ய விமானப்படை குண்டுகளை வீசியது. தலைநகர் கீவில் ராணுவ நிலையை குறிவைத்து ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் இன்றும் குண்டு மழை பொழிந்து வருகிறது.
மேலும் தலைநகர் கீவ்-யில் உள்ள செர்னோபில் அணு உலையையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 3 மைல் தொலைவில் ரஷ்யா ராணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கீவ் நகரின் அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உக்ரைன் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் படி, நேற்று பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைப்பேசியில் பேசினார். அப்போது, தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார் என்றும் பிரதமர் மோடி உக்ரைனுக்கு எதிராக போரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில் உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கிறது.பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டத்தில் இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.