பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அதிபர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் உலகில் எல்லா நாடுகளுமே அரண்டுக்கிடங்கின்றன. கொரோனா வைரஸ் பரவலின் சங்கிலியை அறுக்கும் வகையில் பல நாடுகளின் லாக் டவுன்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கொரோனா வைரஸால் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலு, நோயின் தீவிரத்தை உணராமல் பிலிப்பைன்ஸில் பொதுமக்கள் வெளியே சுற்றிவருகிறார்கள்.
இந்நிலையில், பொதுமக்கள் வெளியே சுற்றுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என  ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார்.

 
நாட்டு மக்களிடம் உரையாற்றிய டுட்டர்டே, “ஊரடங்கு உத்தரவை மக்கள் அனைவரும் பின்பற்றவேண்டியது அவசியம். இதை மீறி சுகாதார பணியாளர்கள், மருத்துவர்களுக்கு இடையூறு செய்வது மிகப்பெரிய குற்றம். ஊரடங்கை மீறுவோர்களால் சிக்கல் ஏற்பட்டாலோ, உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, அவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று ராணுவத்தினருக்கும் போலீஸாருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்” எனப் பேசினார்.