தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை மீண்டும் பரிசோதனை செய்யலாம் என, சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இது தடுப்பூசி ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும் என தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது. 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும், வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களும், அஸ்ட்ராஜெனேக என்ற மருத்துவ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததன. இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அதற்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை இந்தியாவில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டது.  இதனை அடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியது. 

உலக அளவில் மருத்துவ பரிசோதனைகளில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது சகஜமான ஒன்று தான் எனவும், மருந்து செலுத்தப்பட்டவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆராயப்படும் என்றும் அஸ்ட்ராஜெனேக மருந்து நிறுவனம் தெரிவித்தது. அதே நேரத்தில் விரைவில் மூன்றாவது கட்ட பரிசோதனை தொடங்கும் என்றும் கால விரயம் இன்றி  பரிசோதனையை செய்து முடிக்க முயற்சிக்கப்படும் எனவும்  அஸ்ட்ராஜெனேக கூறுயுள்ளது. இந்நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி மருந்தை மீண்டும் பரிசோதனை செய்யலாம் என சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.  உடல்  நலம் பாதிக்கப்பட்டவர் குணம் அடைந்துள்ளதாகவும் அதில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பதாலும், மீண்டும் பரிசோதனையை தொடங்குவதற்கு சீரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.