அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சவுதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளை அதிகரிக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதாக உறுதி அளித்தார். இது தொடர்பாக பெண்டகனிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியில், முதற்கட்டமாக அமெரிக்கா அளவான எண்ணிகையில் ராணுவத்தை அனுப்புகிறது என தெரிவித்திருக்கிறது. மேலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இராணுவ உபகரணங்களை விரைவாக அனுப்ப திட்டத்தையும் அமெரிக்கா அறிவித்தது.

இது குறித்து பேசிய அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர்; சவுதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க ராணுவப் படைகளை நிலைநிறுத்த ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது முதன்மையாக தற்காப்பு, வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பில் கவனம் செலுத்தும். தங்களை தற்காத்துக் கொள்ளும் திறனை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேம்படுத்துவதற்காக இராணுவ உபகரணங்கள் வழங்குவதை அமெரிக்கா விரைவுபடுத்தும், அதற்காக நாங்கள் பணியாற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

ஏமன் கிளர்ச்சியாளர்கள் அராம்கோ எண்ணெய் தாக்குதலுக்கு பொறுப் பேற்றிருந்தாலும், அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து புகார் கொடுத்து வந்தது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் சவுதியில் நடந்த அதிபயங்கர தாக்குதல் எச்சத்தின் தடயங்களை சோதித்த சவுதி ராணுவம், ஈரான் நாட்டின் அடையளங்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஈரானிய டெல்டா விங் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் அராம்கோ எண்ணெய் ஆலை தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவிற்கு ராணுவம் அனுப்புவது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், சரி, மேலே செல்லுங்கள். ஈரானில் உள்ள 15 முக்கியமான இடங்களைத் தாக்குங்கள் எனக் சொல்வது எனக்கு சாதாரண விஷயம். ஆனால் என்னால் முடியுமென்றாலும், நான் அதைச் செய்ய விரும்பவில்லை என கூறினார்.